ஹவாய்: 300 அடி உயரமான குன்றிலிருந்து, கிளாவுயா எரிமலையின் வாய்க்குள் விழுந்த ஒரு சுற்றுலாப் பயணி, மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு பசிபிக் கடலில் அமைந்த ஹவாய் தீவில் உள்ள கிளாவுயா எரிமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அந்த எரிமலையில் பல தடுப்புகளும் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை மீறி செல்லக்கூடாது என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், சிலர் இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில், அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற ஒரு பயணி, எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் நடந்துகொண்டதால் எரிமலை வாய்க்குள் விழுந்துவிட்டார்.

70 அடிக்கு கீழே குறுகிய விளிம்பில் அவர் சிக்கிக்கொண்டார். கடுமையான காயமடைந்த அவரை, இரவு 9 மணியளவில் கண்டுபிடித்த மீட்புப் பணியாளர்கள், ஒருவழியாக மீட்டு, ஹிலோ மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த நபர் யார் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.