முதலிரவிலேயே மனைவி கொலை.. கணவனும் தூக்கில் தொங்கிய மர்மம்..

முதலிரவிலேயே மனைவி கொலை.. கணவனும் தூக்கில் தொங்கிய மர்மம்..

திருமணம் முடிந்த நாளன்றே மனைவியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் புது மாப்பிள்ளை.

மீஞ்சூரைச் சேர்ந்தவர் 28 வயதான நீதிவாசன். இவருக்கும் இவரது உறவுக்காரப்பெண் 22 வயது சந்தியாவுக்கும் ஒரு வருடம் முன்பே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மார்ச் மாதம் நடப்பதாக இருந்த திருமணம் ஊரடங்கினால் தள்ளிப்போய் கடந்த புதன்கிழமை அன்று நெருங்கிய உறவினர்கள் 20 பேர் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு உறவினர்கள் அனைவரும் மணமக்களுடன் நீதிவாசன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.  இரவு 11.30 மணியளவில் மணமக்கள் அறையிலிருந்து புதுப்பெண் சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அனைவரும் ஓடிச்சென்று பார்த்த போது நீதிவாசன் அந்த அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது சந்தியா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  அருகிலேயே ரத்தக்கறையுடன் கடப்பாரை ஒன்றும் கிடந்துள்ளது.

உடனடியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்த, அவர்கள் நீதிவாசனை தேடி வந்த நிலையில் நேற்று காலையில் அவரது உடல் ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.  இவரது உடலருகே எந்த தற்கொலை கடிதமும் காணப்படவில்லை என்கின்றனர் காவல்துறையினர்.

திருமணம் முடிந்த அன்றே மனைவியைக் கொலை செய்யும் அளவிற்கு என்ன பிரச்சினை இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக்கூட முடியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் அனைவரும்.

– லெட்சுமி பிரியா