தானேசர், அரியானா

ரியானா மாநிலம் தானேசர் பகுதியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சார பேரணியில் ஒருவர் காகிதத்தை விட்டு எறிந்து கூச்சலிட்டுள்ளார்.

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.   இதையொட்டி மாநிலம் எங்கும் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது.   இந்த வரிசையில் அரியானா மாநிலம் தானேசர் பகுதியில் ஒரு தேர்தல் பிரசாரப் பேரணி நடந்தது.  இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார்.   அந்தப் பேரணியின் இடையே ஒருவர் காகிதங்களை எரிந்து கூச்சலிட்டுள்ளார்.

மோடியின் உரைக்கு நடுவே எழுந்த அந்த மனிதர் திடீரென எழுந்து பெண் குழந்தைகளைப்  பெறுவோம்,  பெண் குழந்தைகளைக் காப்போம் என்பது எங்கு போனது” எனக் கூச்சலிட்டுள்ளார்.   அத்துடன் தனது கையிலிருந்த காகிதங்களை மோடியை நோக்கி வீசி உள்ளார்.   இதையொட்டி அங்கு 5 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கூடியிருந்த மக்களில் ஒரு சிலர் தங்கள் இருக்கையில் ஏறி நின்று நடந்தவற்றைக் கவனிக்கத் தொடங்கி உள்ளனர்.

மஃப்டியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை சூழ்ந்துக் கொண்டு அவரை ஊடகங்கள் கவனிக்கும் முன்பு அப்புறப்படுத்தியுள்ளனர்.   ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றிக்கொண்டு இருந்துள்ளார்.  கூச்சலிட்ட மனிதரின் பெயர் அசோக் குமார் எனவும் அவர் குலாப் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அவர் வீசி எறிந்த காகிதங்களில் அவர் மோடிக்கு எழுதிய கடிதம் உள்ளது.   அந்தக் கடிதத்தில் அவர், “கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி யமுனாநகரில் ஒரு எட்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி ஆசிரியரால் பாலியல்  பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.   அந்தப் பள்ளியின் முதல்வர் இந்நிகழ்வை மறைக்க முயற்சி செய்துள்ளார்.  ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர் மறுக்கவே  பள்ளி முதல்வர் அவ்விருவரையும் அடித்து ஜாதியைச் சொல்லித் திட்டி உள்ளார்.

இது குறித்துப் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.   ஆனால் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பெற்றோர்கள்மீது வழக்குப் பதிந்துள்ளனர்.    இது குறித்து காவல்நிலையத்தின் முன்பு பல முறை போராட்டம் நடத்தியும் அந்த வழக்கை திரும்பப் பெறவில்லை”எனக் குறிப்பிட்டுள்ளார்.  இது குறித்து விசாரணை நடப்பதாக அப்பகுதி காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.