ஹோட்டலில் சர்வராக வேலைப்பார்க்கும் சந்திரபாபு நாயுடு – கண்டுப்பிடித்தால் ரூ. 1 லட்சம் பரிசு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போல தோற்றமளிக்கும் நபரை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என இயக்குநர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவை போன்று தோன்ற்றமளிக்கும் ஒருவர் ஹோட்டலில் சர்வராக வேலைப்பார்க்கும் வீடியோவையும் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.

chandrababu

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. என்.டி.ஆரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமான தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கதாபாத்திரத்துக்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கும் வேளையில் அவரைப்போன்ற ஒருவரது வீடியோ வைரலாக பரவியது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் திரையுலக நட்சத்திரமாக இருந்தவருமான என்.டி.ராமாராவின் (என்.டி.ஆர்) வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக தயாராகி வரும் படத்தில், அவரது இரண்டாவது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முதலில் இந்த திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்குவதாக இருந்தது. ஆனால், திரைக்கதையில் பாலகிருஷ்ணா திருப்தி அடையாததால் கிரிஷ்-க்கு படத்தை இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும், மனம் தளராத ராம் கோபால் வர்மா,என்.டி.ஆரின் முதல் மனைவியான லக்‌ஷ்மியின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். என்.டி.ஆர் – லக்‌ஷ்மி இடையேயான வாழ்க்கையை மையக்கதையாக்கி அவர் உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போலவே உருவத்தோற்றம் கொண்ட நபர் ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

chandrababu

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா, “இந்த நபரை உங்களுக்கு தெரியுமானால் என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள். அதற்கு பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என பதிவிட்டு தனது இ-மெயில் முகவரியையும் இணைத்துள்ளார்.

தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு, 28 வயதில் கலைத்துறை அமைச்சராக இருந்த போது என்.டி.ஆர். பழக்கமானார். என்.டி.ஆரின் இரண்டாவது மகளை திருமணம் செய்து கொண்ட அவர், என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கும் போது கூட காங்கிரசில் இருந்தார்.

1982-ல் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளரிடம் சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தார். பின்னர், அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தற்போது அக்கட்சியின் தலைவராக உள்ளார்.