க்ரா

தான் இஸ்லாமியர் என்பதால் தன்னை கொல்லக்கூடும் என பயந்து பெண்ணைப்போல் புர்கா அணிந்து பயணம் செய்த ஒரு ஆண்  எஞ்சினீயரால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

டில்லி செல்லும் ரெயில் ஒன்றில் புர்கா அணிந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  உடன் பயணித்தவர்களுக்கு அவரது நடவடிக்கை சந்தேகத்தை உண்டாக்கியது.   அவர் ஒரு பெண்ணைப் போல நடந்துக் கொள்ளவில்லை என ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.  அவரை பரிசோதித்ததில் அவர் ஒரு ஆண் என தெரிய வந்தது.

அவரை ரெயில்வே காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.  அவர் தனது பெயர் நஜ்முல் ஹாசன் எனவும் தான் ஒரு எஞ்சினீயர் எனவும் தெரிவித்தார்.   இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது தற்போது அதிகரித்து இருப்பதால் பாதுகாப்புக்க்காக தான் புர்கா அணிந்து பயணம் செய்ததாகவும் கூறினார்.

மேலும் கூறுகையில், “நான் உடல்நலமற்று உள்ள எனது உறவினரைக் காண அடிக்கடி டில்லி செல்வது வழக்கம்.   சென்ற வாரம் நான் செல்லும் போது, அலிகார் ரெயில்வே ஸ்டேஷனில் தவறுதலாக ஒருவரை தள்ளி விட்டேன்.  தவறி விழுந்த அவர், அனைவர் முன்னிலையிலும் என்னை தாறுமாறாக திட்ட ஆரம்பித்தார்.  எனது மதத்தை பற்றியும் கேவலமாக பேசினார்.  அவருடன் வேறு சிலரும் சேர்ந்துக் கொண்டனர்.  ஒருநாள் என்னை நன்கு கவனிப்பதாக கூறி விட்டுச் சென்றார்.  சமீபத்தில் நான் ஓடும் ரெயிலில் ஒரு இஸ்லாமியரை அடித்துக் கொன்ற நிகழ்வை கேள்விப் பட்டேன்.  அதிலிருந்து நானும் கொல்லப் படுவேன் என பயந்து புர்கா அணிந்து பயணம் செய்தேன்” என கதறி அழுதார்.

இதைப் பற்றி விசாரித்த அதிகாரி ராஜேஷ் பாண்டே, நஜ்முல் சொல்வது உண்மை என கண்டறிந்தார்.  அவர் கூறியது போலவே ஒரு நிகழ்வு ரெயில் நிலையத்தில் நடந்தது உண்மை என தெரிந்ததும், இவர் குற்றமற்றவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.  இதனல் நஜ்முல் விடுவிக்கப்பட்டார்.