கிளிமானூர், கேரளா

லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்த பணத்தில் நிலம் வாங்கியவருக்கு நிலத்தில் இருந்து நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள கிளிமனூர் என்னும் ஊரில் ரத்தினாக்ரன் பிள்ளை என்பவர் வசித்து வந்தர். முன்னாள் கவுன்சிலர் ஆன இவருக்குத் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது.  சென்ற ஜனவரி மாதம் நடந்த கிறிஸ்துமஸ் பம்பர் குலுக்கலில் இவருக்கு ரூ. 6 கோடி லாட்டரி பரிசு கிடைத்தது.  அவர் அந்த பணத்தைக் கொண்டு விவசாய நிலம் வாங்க உள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார்.

அதன்படி அதே ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள 27 செண்ட் விளை நிலத்தை அவர் வாங்கி உள்ளார்.  அவர் அந்த விவசாய நிலாத்தை செப்பனிட ஆட்களைக் கொண்டு தோண்டி உள்ளார்.  அந்த நிலத்தில் ஆறு ,மூடப்பட்ட மண்பானைகள் கிடைத்துள்ளன.  அதை திறந்த போது மீண்டும் அதிருஷ்ட தேவதை அவரைக் கண் திறந்து பார்த்தது தெரிய வந்துள்ளது.

 

அந்தப் பானைகளில் 2595 புராதன செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் திருவாங்கூர் அரசரான ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சியின் போது அச்சடிக்கப்பட்டதாகும்.  இந்த நாணயங்களின் மொத்த எடை 20.4 கிலோ இருந்துள்ளன.  இது குறித்து பிள்ளை உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.  அவர்கள் தொல் பொருள் அதிகாரிகளுடன் வந்து நாணயங்களைப் பார்வை இட்டனர்.

இது குறித்து தொல் பொருள் அதிகாரிகள், “இந்த பானையில் 4 விதமான நாணயங்கள் இருந்தன.  இவை செம்பு, வெள்ளி மற்றும் தங்கக் கலவையினால் செய்யப்பட்டவை ஆகும்.  இவை அனைத்தும் நூறாண்டுகளுக்கு முந்தியதாகும். இதன் உண்மையான மதிப்பு தற்போது உடனடியாக கணக்கிட முடியாது.” எனத் தெரிவித்துள்ளனர்.  தற்போது இந்த நாணயங்கள் திருவனந்தபுர கருவூலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.