Random image

இஸ்லாமியரை எரித்துக் கொன்ற இளைஞருக்கு எம் பி டிக்கட்

க்ரா

சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியரை எரித்துக் கொன்றவருக்கு ஆக்ரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒரு கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வருடம்  டிசம்பர் மாதம் முகமது அப்சல் என்னும் ஒரு வங்காள இஸ்லாமியர் எரித்துக் கொல்லப்பட்டார்.   அவரை ராஜஸ்தானை சேர்ந்த சம்புலால் ரேகர் என்பவர் அடித்து உயிரோடு எரித்துக் கொல்லும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியது.  அதை ஒட்டி கைது செய்யப்பட்ட ரேகர் தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாநிலக் கட்சியான உத்திரபிரதேச நவநிர்மாண் சேனை தங்கள் கட்சியின் ஆக்ரா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சம்புலால் ரேகரை தேர்ந்தெடுத்துள்ளது.  இதை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஜானி தெரிவித்துள்ளார்.   மேலும் சம்புலால் ஆக்ரா தொகுதியில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் கூறி உள்ளார்.

இது குறித்து ஜானி, “நான் வெகுநாட்களாக சம்புலால் உடன் தொடர்பில் உள்ளேன்.   ஆக்ரா தொகுதியில் இந்து மத வேட்பாளர் மட்டுமே போட்டியிட வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.  அதை ஒட்டி சம்புலாலை தேர்ந்தெடுத்தோம்.   அவரும் எங்கள் விருப்பத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அவர் சிறையில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்வார்” என கூறி உள்ளார்.

குற்றப்பின்னணி உள்ளவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்தது தவறில்லை எனவும் ஏற்கனவே பல குற்றங்களில் சம்மந்தப்பட்டுள்ள பலர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி உள்ளனர் என ஜானி தெரிவித்துள்ளார்.    இந்த தகவலை அளித்த ஜானி மீது மாணவர் தலைவர் கன்னையா குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பேருந்தில் ஆயுதம் கடத்தியதாகவும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.