மலிவு விலை ரூ. 251 ஸ்மார்ட் போன் அதிபர் கைது

காசிதாபாத்:

ரூ. 251க்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக உறுதி அளித்த தொழிலதிபர் மோகித் கோயலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் ரூ. 251க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படும் என்று கடந்தாண்டு மோகித் கோயல் அறிவித்தார். ஆன் லைன் மூலம் இதற்கு முன் பதிவு செய்யப்பட்டது. ஆயிரகணக்கானவர்கள் இதை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தனர்.

இவ்வளவு குறைவான விலைக்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்ய முடியாது என்று இதர முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. தயாரிப்பு தொழிற்சாலையே இல்லாமல் இந்த நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவித்தபடி இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையை முழுமையாக தொடங்கவில்லை. அதோடு சில மாதங்கள் கழித்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து வெளியேறுவதாக மோதிக் கோயல் அறிவித்தார். இதன் பின்னர் அன்மோல் கோயல் என்ற நிறுவன இயக்குனர்களில் ஒருவர் நிர்வாக இயக்குனராக நியமிக்கட்டப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் வரை 70 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டு விட்டது என்று அவர் அறிவித்தார்.

மேலும், இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பலரிடம் டெபாசிட் தொகை வசூல் செய்யப்பட்டது. ஆனால், உறுதியளித்தபடி விநியோக உரிமை வழங்கவில்லை. இந்நிலையில் நேரு நகரை சேர்ந்த அயம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் காசிதாபாத் சிகானி கேட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் விநியோக உரிமைக்காக ரூ. 30 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. இதில் ரூ. 14 லட்சத்துக்கு மட்டுமே போன் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகைக்கு போனும் வழங்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று புகார் செய்யப்பட்டது. இதைய டுத்து போலீசார் மோகித் கோயல் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் அன்மோல் கோயல், தர்நா கார்க், அசோக் சாதா, சுமித்குமார், அன்மல் கோயாலின் சகோதரர் மோகித் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வேறு யாரும் கைது செய்யப்படவில்லை.