மனித வேட்டையாடிய பெண் புலியைக் கொன்றதற்கு மேனகா கண்டனம்

டில்லி

காராஷ்டிரா மாநிலத்தில் மனிதர்களை வேட்டையாடிய பெண் புலியை கொன்றதற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கனடனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் யுவத்மல் வனப்பகுதியில் அவ்னி என்னும் பெயரிடப்பட்ட பெண் புலி ஒன்று இருந்தது. கடந்த இரு வருடங்களில் அந்தப் புலி சுமார் 13 பேரை கொன்றுள்ளது. அதனால் பீதி அடைந்த மக்கள் அந்தப் புலியை கொல்ல அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். உச்சநீதிமன்றம் பெண் புலி அவ்னியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது.

ஐதராபாத் நகரை சேர்ந்த புகழ்பெற்ற வேட்டைக்காரர் நவாப் ஷஃபத் அலி. அவருடைய மகனான அஸ்கர் அலி கடந்த வெள்ளிக்கிழமை அன்று புலி அவ்னியை சுட்டுக் கொன்றார். இது மக்களிடையே மன அமைதியை தந்தது. ஆனால் இதற்கு விலங்குகள் ஆர்வலரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில் இந்த வேட்டைக்கு கண்டனம் தெரிவித்து தொடர்ந்து பதிவுகள் இட்டுள்ளார்.

தனது முதல் டிவிட்டரில் “நான் பெண் புலியான அவ்னி யுவத்மல் பகுதியில் கொடூரமாக கொல்லப்பட்டதால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து மேனகா காந்தி தனது டிவிட்டரில்,

“இது ஒரு நேரடியான கிரிமினல் குற்றமாகும். பல மிருக  ஆர்வலர்களின் வேண்டுகோளையும் மீறி அந்த புலியைக் கொல்ல மகராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் உத்தாவிட்டுள்ளார்.”

”மிருகங்களின் மீது இரக்கமற்று எடுக்கபட்ட இந்த நடவடிக்கை குறித்து நான் சட்டம் மூலமும் அரசியல் மூலமும் போரிட உள்ளேன்”

“ஐதராபாத்தை சேர்ந்த வேட்டையாளர் வழக்கமாக பல புலிகளையும் சிறுத்தைகளையும் கரடிகளையும் கொன்று குவித்துள்ளார். தற்போது அவர் மகன் இதை செய்துள்ளார்.”

“அவருக்கு வேட்டையாட உரிமம் கிடையாது. இதனால் இந்த வேட்டை சட்ட விரோதமானது. அந்தப் புலியை உயிருடன் பிடித்து அடைக்காமல் கொல்லச் சொன்னது மிகவும் தவறான செய்கையாகும்.”

”இந்த கொடூரமான கொலையின் மூலம் இரு புலிக் குட்டிகளை அதன் தாயிடம் இருந்து பிரித்து துயரத்துக்குள்ளாக்கி உள்ளனர்.”

என பதிந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு சமூக ஆர்வலர், “மேனகா காந்தி விலங்குகளின் மீது அக்கறை கொண்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அதே வேளையில் மிருகங்களால் அவதியுறும் மனிதர்களைப் பற்றியும் சிறிது சிந்திப்பது நல்லது.” என தெரிவித்துள்ளார்.

You may have missed