Random image

பெண் கைதிகளை சந்திக்க குழந்தைகளுக்கு வாரத்தில் 3 முறை அனுமதி…..மேனகா காந்தி பரிந்துரை

டில்லி :

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாயை வாரத்தில் 3 நாட்கள் சந்திக்க குழந்தைகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார்.

சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. சிறையில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் அல்லது குழந்தை உள்ள பெண்களை சிறையில் அடைக்கும் போது 5 வயது வரை குழந்தைகளை அவர்கள் சிறைக்குள் வைத்திருக்க முடியும். அதன் பின்னர் குழந்தைகள் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகங்களில் சேர்க்கப்படுவர்.

காப்பகங்களில் சேர்க்கப்பட்ட பின்னர் குழந்தைகளுக்கும், சிறை நிர்வாகத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக, சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் தாயும், குழந்தையும் மீண்டும் ஒன்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது.

தாயை பிரிந்த குழந்தைகள் தவறான வழியில் செல்வது அதிகரித்துள்ளது. மேலும் சில பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலமும் நடக்கிறது. இதற்கு சிறையில் உள்ள தாய்க்கும் குழந்தைகும் இடையே தொடர்பு இல்லாமை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற செயல்களை தவிற்கும் வகையில், காப்பகத்தில் உள்ள குழந்தைகள் வாரம் 3 முறை சிறையில் உள்ள தாயை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். இதன் மூலம் தாய், குழந்தை இடையிலான உறவு மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.