மத்திய அமைச்சர் மீது செக்ஸ் புகார் : விசாரணை கோரும் மேனகா காந்தி

டில்லி
த்திய அமைச்சர் எம் ஜே அக்பர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மற்றொரு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி உள்ளார்.
மத்திய பாஜக அமைச்சரவையில் இணை அமைச்சராக பணி புரிபவர் முன்னாள் பத்திரிகையாளரான எம் ஜே அக்பர். இவர் மீது இரு பெண் பத்திரிகையாளர்கள் தங்களை அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது பாலியல் சீண்டல் செய்ததாக கூறி உள்ளனர். இது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எந்த ஒரு மத்திய அமைச்சரும் கருத்து கூறாமல் இருந்தனர்.


செய்தியாளர்கள் அக்பர் மீது எழுப்பப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து மத்திய பெண் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் நேரடியாக கேள்விகள் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து முதன் முதலாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கண்டனக் குரல் எழுப்பி உள்ளார்.


ஒரு தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் மேனகா காந்தி, “மத்திய அமைச்சரும் மூத்த பத்திரிகையாளருமான எம் ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது விரும்பத் தகாத ஒன்றாகும். அவர் மிது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். முன்பு இது போன்ற விவகாரங்களை வெளியில் சொல்லாமல் இருந்த பெண்கள் தற்போது தைரியம் அடைந்துள்ளனர். இது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
மத்திய அமைச்சர் மீது விசாரணை நடத்துவதன் மூலம் உண்மை என்ன என்று வெளிவர வாய்ப்பு உள்ளது. நான் இது குறித்து சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளேன். அந்த கடிதத்தில் எத்தனை நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன். மேலும் உயர்பதவியில் இருப்பவர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டு வரும் போது தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.