ங்களூரு

தீம் பார்க் சென்ற இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் தாக்கப்பட்டதற்கு மாணவியின் தாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மங்களூருவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உல்லாசப் பயணம் சென்ற மூன்று மாணவ மாணவிகள் திடீரென சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.   அதை ஒருவர் வீடியோ படம் எடுத்துப் பதிய அந்தப் பதிவு வைரலாகியது.    அந்த வீடியோவில் சில இந்து அமைப்பினர் அவர்களை தாக்கும் போது லவ் ஜிகாத்துக்கு எதிராக பேசிய பேச்சுக்களும் பதிவாகி இருந்தன.

இது குறித்து அந்தப் பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.  மேலும் செய்தியாளர்களை சந்தித்த அந்தத் தாய், “எனது மகள் எனது அனுமதியை வாங்கிக் கொண்டு இந்த தீம் பார்க்குக்கு உல்லாசப் பயணம் செய்துள்ளார்.  மொத்தம் மூன்று பேர் சென்றுள்ளனர்.  அதில் என் மகள் ஒரு இந்துப் பெண்.   ஒரு மாணவர் இஸ்லாமியர்.  என் மகளைத் தவிர வேறொரு பெண்ணும் அந்தக் குழுவில் இருந்துள்ளார்.  அந்த தீம் பார்க்கில் இருந்து அவர்கள் வெளியேறிய போது திடீரென இந்துக்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் அவர்களை சூழ்ந்துக் கொண்டு கண்டபடி பேசி உள்ளனர்.

அந்த அமைப்பினர் இந்த மூவரிடமும் பெயர்களை விசாரித்துள்ளனர்.    இந்த மாணவர்களும் தங்கள் பெயரைக் கூறி உள்ளனர்.   உடனே அந்த அமைப்பினர் லவ் ஜிகாத் செய்வதற்காக இந்தப் பெண்ணை மயக்குகிறாயா என அந்த இஸ்லாமிய மாணவனைக் கேட்டுள்ளனர்.   மேலும் என் மகளை வீட்டுக்கு தெரியாமல் இஸ்லாமியருடன் ஊர் சுற்றுகிறாயா எனக் கேட்டுள்ளனர்.

என் மகள் பின்னால் இருந்து அவருடைய தலையில் அடிக்கப்பட்டுள்ளார்.  திடீரென ஏதோ தலையைத் தாக்க அவர் திரும்பி உள்ளார்.  அப்போது  அவர் சிவப்பு உடை அணிந்த ஒரு இந்து மத அமைப்பாளர் அடித்ததை உணர்ந்துக் கொண்டுள்ளார்.   பக்கத்தில் இருந்த போலீசாரும் இவர்களுக்கு உதவ வில்லை என தெரிகிறது.   என் மகள் என்னிடம் சொல்லி விட்டு என் அனுமதியுடன் சென்றுள்ளார்.   இது எங்களின் வாழ்க்கை.   இதில் தலையிட இந்த இந்து அமைப்பினருக்கு யார் உரிமையைக் கொடுத்தது?   எனக்கு அவர்களிடம் எந்த பயமும் இல்லை.   எங்களது புகாரை நாங்கள் திரும்பிப் பெறும் எண்ணமே இல்லை”  என தெரிவித்துள்ளார்.

வீடியோ மூலம் இந்த மாணவர்களை தாக்கியது யார் என தெரிந்துள்ளது.   தற்போது இந்து அமைப்பினர் நடத்தி வரும் லவ் ஜிகாத் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த அவர்கள் ஏற்கனவே பப்புகள், பார்கள் மற்றும் திரையரங்குகள் என மங்களூருவின் பல இடங்களிலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக மக்களிடம் உரை ஆற்றி வந்துள்ளனர்.  இந்தக் குழுவுக்கு தலைவர் ஆக செயல் படுபவர் சம்பத் ஷெட்டி எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பத் ஷெட்டி மற்றுமுள்ளோரை காவல் துறை கைது செய்துள்ளது.   அவர்கள் மீது தவறாக நடந்துக் கொள்ளுதல், பயங்கர ஆயுதங்களால் தாக்குவது, பெண்ணின் மீது மான பங்கத் தாக்குதல் செய்வது,  சிறுவர்களை தாக்குவது,  மதத்தை கொச்சைப் படுத்தி பேசுதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.