சென்னை – சேலம் புதிய நெடுஞ்சாலையால் அழியப்போகும் மாந்தோப்புகள்

--

சென்னை

சென்னக்கும் சேலத்துக்கு இடையே அமைக்கப்பட உள்ள புதிய நெடுஞ்சாலையால் பல்லாயிரக்கணக்கான மாமரங்கள் அழியும் என ”தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நகரை விட்டு வெளியே வந்ததும் பச்சைப் பசேல் என மாமரங்கள் சாலையின் இரு பக்கமும் அடர்ந்திருக்கும்.   மலைகள் அடர்ந்த அந்த இடங்களில் அமைந்துள்ள அந்த மாந்தோப்புகளில் சென்னை – சேலம்  புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.    சுமார் ரூ.10000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலையினால் 60 கிமீ அளவுக்கு பய்ணிக்கும் தூரம் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மாமரங்கள் மிகுந்துள்ள இந்த பகுதிகளினால் சேலம் நகரம் மாம்பழத் தலைநகரம் எனப் பெயர் பெற்றுள்ளது.   பசுமை வழிச்சாலை எனக் கூறப்படும் இந்த சாலை மரங்கள் அடங்கிய தோப்புகள் மற்றும் காடுகளின் ஊடே அமைக்கப்பட உள்ளது.  இதற்காக இந்தப் பகுதியில் உள்ள சுமார் 2300 ஹெக்டேர் நிலங்கள் கையகப் படுத்த உள்ளன.

சேலம் மாவட்டம் வரகம்பாடியை சேர்ந்த இளங்கோவன், “இந்த சாலை இவ்வளவு பசுமை நிறைந்து காணப்படுவதற்கு ஒரே காரணம் இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த மாமரங்கள் ஆகும்.   பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற சமயத்தில் நடப்பட்ட பல மரங்கள் இங்கு உள்ளன.     எனது முப்பாட்டனாருக்கும் முன்பிருந்தே இந்த மரங்கள் உள்ளன.   இந்தப் பகுதியில் உள்ள மாமர வேர்கள் குறைந்தது ஆறடி நீளத்துக்கு மேல் பூமிக்குள் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.

அதே ஊரை சேர்ந்த காசி மற்றும் முருகேசன், ”சேலம் மாவட்டத்தின் புகழ் பெற்ற மாங்கனிகளான குண்டு மாம்பழம் மற்றும் நடுசாலை மாம்பழங்கள் இந்தப் பகுதியில் அதிகம் விளைகின்றன.   ஒவ்வொரு மரமும் வருடத்துக்கு சுமார் 1 டன்கள் வரை மாங்காய்கள் தருகின்றன.   இத்தகைய ஒரு விளைச்சலை 40, 50 வருடங்கள் பழமையான மாமரங்களாலும் தர இயலாது.   இங்கிருந்து இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கு வருடா வருடம் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது“ என தெரிவித்துள்ளனர்

இந்த மாந்தோப்புகளை பசுமை நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்த உள்ள அரசுக்கு இவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ‘தி நியூஸ் மினிட்’ கூறுகிறது.  அரசு பசுமையான தோப்புகளை அழித்து விட்டு பசுமை நெடுஞ்சாலை அமைப்பதற்கு இந்த மாவட்டத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   ஏற்கனவே கடந்த வருடம் கடும் பஞ்சத்தை சந்தித்த இவர்களுக்கு அரசின் நிலக் கையகப்படுத்தும் திட்டம் மேலும் ஒரு அடியாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரியான சுகுமாரன், “முந்தைய காலத்தில் ஆற்றின் கரையோரம் நாகரிகங்கள் வளர்ந்ததைப்போல் தற்போது நெடுஞ்சாலைகளின் ஓரம் நாகரிகம் வளர்ந்து வருகிறது.   அரசு இந்த நிலங்களை கையகப்படுத்த சந்தை விலையை விட அதிகத் தொகையை இழப்பீடாக வழங்க தயாராக உள்ளது.   இந்த இழப்பீட்டினால் இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு ஆவன செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.