மணிப்பூரின் ஒருமைப்பாடு பாதிக்காது என மத்திய அரசு உறுதி! முதலமைச்சர் பைரோன் சிங் தகவல்

இம்பால்: நாகா ஒப்பந்தத்தால் மணிப்பூர் மாநில ஒருமைப்பாடு, எவ்விதத்திலும் பாதிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் கூறி இருக்கிறார்.
மத்திய அரசு தீர்வு காண முயற்சித்து வரும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று நாகா அமைதி ஒப்பந்தம். அது தொடர்பாக, மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங், தமது அமைச்சரவை சகாக்களுடன் தலைநகர் டெல்லிக்கு சென்றார்.


அங்கு அவர் மத்திய அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு சொந்த ஊர் திரும்பினார். இந் நிலையில், சந்திப்பு குறித்து அவர் தெரிவித்ததாவது:
மக்களின் நலன்களுக்காக திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதுவரை வன்முறையில் இறங்காமல் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வாக்குறுதி தந்திருக்கின்றனர்.


விரைவில் மத்திய அரசு, நாகா ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பாக அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசப்போவதாக கூறி இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல, மாநில அரசும் இன்னும் சில நாட்களில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கும்.


மணிப்பூரின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொருட்டு, அமைச்சரவையில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 2 தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் கொண்டு இருக்கிறது.
எனவே, இந்த முறை அரசு எதிர்பார்த்தது நிச்சயம் நிறைவேறும். அதற்காக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.