ம்பால்

ரிசர்வ் வங்கியின் அறிவுரைக்கு பிறகும்  மணிப்பூரில் ரூ. 10 நாணயத்தை யாரும் வாங்குவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 நாணயங்களில் போலி நாணயம் உலவுவதாக செய்திகள் வந்தன.  ஒரு சில ஊடகங்கள் இரண்டு விதமான நாணயங்களை வெளியிட்டு அதில் ஒன்று அசல் எனவும் மற்றது  போலி எனவும் விவரித்தன.    பாரத ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளிக்கையில் ரூ.10 நாணயங்களில் எதுவும் போலி இல்லை என உறுதி அளித்தது.

ஆயினும் மணிப்பூர் மாநிலத்திலுள்ள சிறு வணிகர்கள், பேருந்து நடத்துனர்கள் உள்ளிட்ட பலர் ரூ.10 நாணயங்களை வாங்குவதில்லை.   இது குறித்து ரிசர்வ் வங்கி விவரம் அளித்துள்ளதாக தெரிவித்தும் பல கடைக்காரர்கள் ரூ. 10 நாணயங்களை பெற்றுக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியையான மங்களெம்பி, “மளிகைக் கடை, காய்கறிக்கடைகளில் ரூ. 10 நாணயங்களை வாங்குவதில்லை.   அது மட்டுமின்றி ஒரு சில தனியார் வங்கிகளிலும் இந்த நாணயங்களை வாங்குவது கிடையாது” என தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இம்பால் நகரக் கிளை பொது மேலாளர் மேரி, “ரூ.10 குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என ஏற்கனவே மக்களுக்கு தெரிவித்துளோம்.   ரூ.10 நாணயங்கள் 14 வித டிசைன்களில் உருவாக்கபட்டுள்ளன.  அதனால் அனைத்து நாணயங்களும் செல்லும்.

நாங்கள் கள்ள நோட்டுக்கள், போலி நாணயங்கள் பற்றி பல விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  ஆயினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்புக்கு பிறகு மக்கள் அனைத்து கரன்சி மற்றும் நாணயங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.” என தெரிவித்தார்.