6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு

சென்னை

ல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை 6 மொழிகளில் தயாரிக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார்.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலராலும் பாராட்டப்பட்ட நாவலாகும்.   இந்த நாவலை திரைப்படமாக்க பலரும் முயற்சி செய்தனர்.  முதலில் மறைந்த எம் ஜி ஆர் இதை திரைபடமாக்க விரும்பி அதன் பிறகு அதை கைவிட்டார்.   அதன் பிறகு ஏபி நாகராஜன் சிவாஜி கணேசன் நடிப்பில் தயாரிக்க விரும்பி அப்போதே ரூ. 3 கோடி செலவாகும் என்பதால் அவரும் கைவிட்டார்.

மணிரத்னம் இந்த நாவலை படமாக்க உள்ளதாக அறிவித்து பிறகு அதைப் பற்றி ஒன்றும் தெரிவிக்காமல் இருந்தார்.  இப்போது பாகுபலி, பத்மாவத் உள்ளிட்ட சரித்திரப் படங்களின் வெற்றியை கண்ட பிறகு மீண்டும் பொன்னியின் செல்வன் தயாரிப்பில் மணிரத்னம் ஆர்வம் காட்டுகிறார்.

இந்த படத்துக்கு இசை அமைக்க ஏ ஆர் ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளார்.   இந்த திரைப்படத்தை 6 மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதால் அந்த மொழிகளின் நடிகர்களை ஒப்பந்தம் செய்ய மணிரத்னம் முயன்று வருகிறார்.  இதில் இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன், மற்றும் ஐஸ்வர்யா ராயிடம் கதையை மணி ரத்னம் கொடுத்துள்ளார்.

அத்துடன் தமிழ் நடிகர்களான, விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜி வி பிரகாஷ், தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டா, கன்னட நடிகர் சுதீப்,  மலையாள நடிகர் நிவின்பாலி ஆகியோரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தெரிகிறது.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தை தயாரிக்க உள்ள மணிரத்னம் முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து ஒரு பெரிய நிறுவனத்துக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.   அது மட்டுமின்றி வேறொருவரை இயக்க வைத்து தாம் இதை மேற்பார்வை செய்ய மணி ரத்னம் விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது.