டில்லி

டில்லி மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா பேருந்தில் பயணம் செய்து மகளிர் கருத்தை கேட்டுள்ளார்.

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு டில்லியில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பெண்கள் ஆதரவு அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் இதை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே  தேர்தல் நாடகம் என விமர்சித்துள்ளது.

இது குறித்து மகளிரின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள ஒரு கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் அனைத்து மகளிரும் இந்த திட்டத்தை வரவேற்பதாக கூறி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மகளிரின் கருத்துக்களை கேட்டறிய டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா பேருந்து பயணம் செய்து விசாரித்துள்ளார்.

மனீஷ் சிசோடியாவிடம் பல பெண்கள் மற்ற போக்குவரத்துக்களை விட பேருந்து பெண்களுக்கு பத்திரமானது என தெரிவித்துள்ளனர். அனிதா என்னும் அலுவலக ஊழியர், “நான் துவாரகாவில் இருந்து அலுவலகம் வர தினமும் ரூ100 செலவு செய்ய வேண்டி உள்ளது. மெட்ரோ கட்டண உயர்வால் நான் பேருந்து பயணம் செய்ய தொடங்கினேன்.

மெட்ரோவை விட பேருந்தில் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த மெட்ரோவில் இலவசப் பயணம் என்பது உண்மையில் அமுலுக்கு வந்தால் நான் மீண்டும் மெட்ரோவுக்கு மாறி விடுவேன். மெட்ரோவில் ஏசி வசதி உள்ளதால் பலரும் அதை விரும்புகின்றனர். கட்டணம் அதிகம் என்பதால் மட்டுமே மெட்ரோவில் பயணம் செய்வதில்லை” என தெரிவித்துள்ளார்.

சுமார் 7 பேருந்துகளில் பயணம் செய்த மனீஷ் சிசோடியா, “இந்த திட்டத்துக்கு பெண்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். நான் அரசு பேருந்தில் பயணம் செய்யும் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் கருத்து கேட்டறிந்தேன். அவர்களில் யாரும் இது தவறான யோசனை என கூறவில்லை.” என தெரிவித்துள்ளார்.