புதுடெல்லி:

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் வகுப்பறைகளை உருவாக்குவதே குறிக்கோள் என டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியோ தெரிவித்துள்ளார்.


டெல்லி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற நிர்வாக தகுதி குறித்த பயிலரங்கில் பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 2015-ம் ஆண்டு ஆத் ஆத்மி ஆட்சிக்கு வந்தபிறகு, 8 ஆயிரம் வகுப்பறைகள் அதிகரித்துள்ளன.

62 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை தற்போது 46 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று குறைத்துள்ளோம்.  ஜுன் மாத இறுதிக்குள் 33 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் குறைக்கப்படும்.

முன்பு பல வகுப்பறைகளில் 167 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை இருந்தது. தற்போதுகூட ஒரு வகுப்பறையில் 80-100 மாணவர்கள் படிக்கின்றனர்.

33 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனினும் ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 60 மாணவர்கள் மிகாமல் பார்த்துக் கொள்வோம்.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஆரம்பப் பள்ளியில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியரும், உயர் நிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஓர் ஆசிரியருக்கு ஒரு வகுப்பறை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என்றார்.