மன்கேடிங் நடந்த முக்கிய போட்டிகள்

ஜெய்ப்பூர்

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது போல் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன.

கடந்த 1947 ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது வினோத் மன்கட் பந்து வீசும் போது ஓட முயன்ற பில் பிரவுனுக்கு இரு முறை எச்சரிக்கை கொடுத்தார். மூன்றாம் முறை விக்கட்டை வீழ்த்தினார்.
இதற்கு ஆஸ்திரேலிய அணி தலைவர் டான் பிராட்மேன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனினும் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இதை விளையாட்டு வீரர்களுக்கு எதிரானது என விமர்சனம் செய்தது. அன்று முதல் இந்த விதிக்கு மன்கேடிங் என பெயர் சூட்டப்பட்டது.

கிரிக்கெட் விதிகள் பல முறை மாற்றி அமைக்கப்பட்டன. ஆயினும் மன்கேடிங் முறை மாற்றப்படவில்லை. இது அதிக ரன்கள் எடுக்க உதவும் உத்தி என்பதால் இந்த விதிமுறையை மாற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளவில்லை. இதைப் போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே பல முறை நடந்ததுண்டு.

இதில் 1987 ஆம் வருட உலகக்கோப்பை பந்தயம் முக்கியமானதாகும்.

அந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் விளையாடிய போது சலிம் ஜாஃபர் கிரீஸை விட்டு வெளியேறினார். ஆயினும் பந்து வீச்சாளர் கர்ட்னி வால்ஷ் அவரை அவுட்டாக்க மறுத்து விட்டார். இதனால் மேற்கு இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

இது உண்மையான விளையாட்டு வீரர் தன்மைக்கு முழு உதாரணம் என பாராட்டப்பட்டது.