2ஜி குறித்து மன்மோகனுக்கு தெரியவில்லை! திமுக ராஜா குற்றச்சாட்டு

சென்னை,

2ஜி குறித்து மன்மோகன் சிங் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று, திமுக முன்னாள் அமைச்சர் ராஜா அதிரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இதன் காரணமாக  திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின்போது, தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவை சேர்ந்த ராஜா இருந்தார். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டது.

அதில், 1லட்சத்துக்கு 76ஆயிரம் கோடி இழப்பு என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றம் நடந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ நீதிமன்றம் கூறி கடந்த 21ந்தேதி ராஜா, கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது.

இந்நிலையில், தனது தொகுதியான நீலகிரி மக்களை சந்திக்க ராஜா நேற்று மேட்டுப்பாளையம் சென்றார். அங்கு அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து  மக்கள் முன்னிலையில் அவர் பேசினார்.

அப்போது,  ‘இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சியினர்  சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை(திமுக)  ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள் என்று கூறினார்.

மேலும், பிரதமர்  மன்மோகன் சிங் நல்ல முறையில்தான்  ஆட்சி நடத்தினார். ஆனால், 2ஜி காரணமாக அவரும்  பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்” என்று குறிப்பிட்ட ராஜா,

2ஜி குறித்து மன்மோகன் சிங்குக்கு புரிதல் இல்லை என்றார்.  மேலும், பிரதமர்  மன்மோகன் சிங்கிற்கும் இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார்” என்று பேசினார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையின்போது, தான்  கோர்ட்டில்  வாதாடியபோது   ”பார்வையற்றவர்கள் யானையை தடவி அதன் உருவத்தை விவரித்தது போல் மத்திய புலனாய்வு அமைப்பும் , உச்சநீதிமன்றமும் 2ஜி வழக்கை கையாண்டு இருக்கிறது” என்பதை குறிப்பிட்டும் அவர் பேசினார்.

திமுக முன்னாள் அமைச்சர் ராஜாவின், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான நேரடி குற்றச்சாட்டு பேச்சு இரு கட்சியினரிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.