ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தலைமை மூலம் மக்களிடையே வலுவான நம்பிக்கையை வரவழைக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறி உள்ளார்.

மன்மோகன் சிங் அடிப்படையில் ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். அவர் இந்திய நிதி அமைச்சராகவும் பிரதமராகவும் பணி புரிந்துள்ளார். இந்த இரு பதவிகளையும் அவர் திறம்பட வகித்து வந்தார் என பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்கள் அவருக்கு பலமுறை புகழ்மாலை சூட்டி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மன்மோகன் சிங் உரையாற்றினார்.

மன்மோகன் சிங் தனது உரையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் தற்போது நாட்டில் எதிர்பார்ப்பு அரசியலை விட அச்சம் தரும் அரசியல் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நீங்கள் அந்த அச்சம் தரும் அரசியலிடம் இருந்து எதிர்பார்ப்பு அரசியலை காப்பீர்கள் என மக்கள் நம்பி வருகின்றனர்.

எனவே உங்கள் முதல் கடமையாக நீங்கள் உங்கள் தலைமை மூலம் அதற்கான வலுவான நம்பிக்கையை மக்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கையை அளிக்க வேண்டும். நான் எனது நாட்டின் வருங்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் நமது நேரு காட்டிய ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து செல்வோம். நேரு ஏற்கனவே சொன்னது போல் நடக்க நமது இதயத்தில் உறுதி கொள்வோம்.

சட்டப்பேரவை உறுப்பினர் மற்றவர்கள் குறிப்பாக எதிர்தரப்பினர் கூறுவதை கவனமுடன் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்கட்சியினர் மீது எந்த ஒரு தகாத செயலிலும் ஈடுபடக் கூடாது. நான் ஒரு சில சட்டப் பேரவைகளில் உறுப்பினர்கள் மோசமாக நடந்துக் கொள்வதை கண்டுள்ளேன். தற்போது அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்ப படுவதால் நாம் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.” என கூறினார்.