டில்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடியை கத்தாவ் மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தில் கடுமையாக தாக்கி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர் பதவிக் காலத்தில் அதிகம் பேசவே இல்லை என  பாஜகவினர் வெகு நாட்களாக குற்றச்சாட்டு சொல்லி வருகின்றனர்.   அவர் தற்போது பதவியில் இல்லாத போதும் அவர் எது குறித்தும் கருத்து தெரிவிப்பதில்லை என பிரதமர் மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.   வெகுநாட்களாக பேசாமல் இருந்ததாக கூறப்படும் மன்மோகன் சிங் சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.

அப்போது மன்மோகன் சிங், “தற்போதைய பிரதமர் மோடி ஒரு காலத்தில் நான் பேசாமல் இருப்பதாகவும் என் மௌனத்தை கலைக்க வேண்டும் எனவும் கூறினார்.  என்னை பாஜகவினர் மௌன மோகன் சிங் என அழைத்த்னர்.   ஆனால் தற்போது உன்னாவ் மற்றும் கத்துவாவில் நடைபெற்றுள்ள பலாத்கார நிகழ்வுகள் குறித்து அவர் மௌனமாக இருக்கிறார்.

எனக்கு அவர் சொன்ன அறிவுரையை மோடி பின் பற்ற வேண்டும்.   பிரதமர் மோடி தற்போதாவது அவர் மௌனத்தை கலைத்து இது குறித்து கருத்து கூற வேண்டும்,   இந்த நேரத்தில் தலைமை பதவியில் உள்ளவர் கருத்து கூறுவது மிகவும் அவசியம் ஆகும்.  அவருடைய கருத்தைக் கொண்டே அவரது கட்சித் தொண்டர்கள் மேற்கொண்டு கடமை ஆற்ற முடியும்” எனக் கூறி உள்ளார்.