டில்லி

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில்  மன்மோகன் சிங் கர்தார்பூர் செல்ல உள்ளார்.

கர்தார்பூரில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாராவில் சீக்கிய மத நிறுவனரும் முதல் குருவுமான குரு நானக் நினைவிடம் உள்ளது.    இங்கு சீக்கியர்கள் ஆண்டு தோறும் குரு நானக் பிறந்த தினத்தின் போது யாத்திரை மேற்கொள்வார்கள்.  இந்த யாத்திரைக்கு உதவும் வகையில் பஞ்சாப் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டின் கர்தார்பூர் குருத்வாரா வரை சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த சாலையில் பயணம் செய்ய விசா தேவை இல்லை.   இந்த  சாலையில் குருதாஸ்பூரில் இருந்து இந்திய எல்லை வரை உள்ள  பகுதியை இந்தியாவும் அங்கிருந்து கர்தார்பூர் வரை உள்ள சாலையைப் பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன.     வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ள குரு நானக் 550 ஆம் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 9 அன்று இந்த சாலை திறக்க உள்ளதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

திறப்பு விழாவின் போது பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று முதலில் பயணம் செய்ய உள்ளது.  இதில் கலந்துக்கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குக்கு அமரீந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.   அந்த அழைப்பை  மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டதாகப் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தில் கலந்துக் கொள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிரதமர் மோடி உள்ளிட்டோரையும் அமரீந்தர் சிங் அழைத்துள்ளார். அவர்களும் இந்த பயணத்தில் பங்கு பெற ஒப்புதல் அளித்துள்ளனர்.