நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரிக்கத்துவங்கியது. முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி குப்தா, கூடுதல் செயலாளராக இருந்த குரோபா மற்றும் சுரங்க ஒதுக்கீடு இயக்குநர் சமாரியா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்தது.

டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி பரத் பரசர் கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அதில் எச்.சி. குப்தா உட்பட 3 அதிகாரிகளும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.  அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தகவல் சொல்லாமலேயே இவர்கள் செயல்பட்டார்கள் என்பதை சாட்சியங்கள் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மன்மோகனசிங் மீது எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனம் தவறு என்று உறுதியாகி உள்ளது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் தண்டனை இன்று அறிவிக்கப்படுவதாக நீதபதி தெரிவித்தார். இதையடுத்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

குப்தா உள்ளிட்ட மூவருக்கு தலா இரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவராக அறியப்பட்டிருந்த ஆடிட்டர் அமித் கோயல் விடுவிக்கப்பட்டார்.