கொரோனா தடுப்பு பணியில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 5 பரிந்துரைகளை மோடிக்கு வழங்கினார் மன்மோகன் சிங்

 

கொரோனாவை எதிர்கொள்ளும் விதத்திலும், தடுப்பூசி போடும் பணியிலும், புள்ளிவிவரங்கள் தொடர்பாகவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கும் பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கும் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஓராண்டாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்.

எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பதை விட மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு போடப்பட்டது என்பதில் கவனம் செலுத்தி தடுப்பூசி போடும் பணியை நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் துரி தப்படுத்துவது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு சில பரிந்துரைகள் வழங்கி கடிதம் எழுதி இருக்கிறார், அதன் முழு விவரம் :

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவ தொடங்கி ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிறது.

நாட்டின் பல்வேறு நகரங்களிலும், உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் பார்க்க முடியவில்லை, தாத்தா பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளை சந்திக்க முடியவில்லை. ஆசிரியர்கள் தங்கள் மாணவச்செல்வங்களை வகுப்பறையில் பார்க்கமுடியவில்லை.

கோடிக்கணக்கானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இந்த நிலையில் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் மக்கள் தங்கள் வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்கு வரும் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன, இந்த முயற்சியில் பெரும்பங்கு தடுப்பூசி திட்டத்தை நாம் செயல்படுத்துவதில் உள்ளது. இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய முன்னெடுப்பு அவசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் என்பதால்  உங்களுக்கு சில பரிந்துரைகளை நான் வழங்குகிறேன்.

  • முதலாவதாக, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,  அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் விநியோகிக்க ஒப்புக்கொண்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக அறிவித்தால், தயாரிப்பாளர்கள் அந்த காலத்திற்குள் இந்த எண்ணிக்கையை உற்பத்தி செய்வதற்கும் அதற்கான ஆர்டர்களை பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும்.
  • இரண்டாவதாக, மாநிலங்களுக்கு வழங்கப்படும்  தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், இதனால் தனக்கு கிடைக்கவேண்டிய அளவு குறித்து மாநில அரசு எந்த வித அச்சமும் இல்லாமல் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள உதவும். மேலும், உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 10 சதவீதம் மட்டும் அவசர தேவைக்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • மூன்றாவதாக, 45 வயதுக்கு குறைந்தவராக இருந்தாலும் தடுப்பூசி தேவைப்படும் முன்கள பணியாளர்களை வகைப்படுத்தும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பள்ளி ஆசிரியர்கள், பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் நீதிமன்றங்களில் முன்கள பணியாளர்களாக வழக்கறிஞர்களை நியமிக்க விரும்பலாம். 45 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி போடலாம்.
  • நான்காவதாக, அரசின் கொள்கைகள் மற்றும் வலுவான அறிவுசார் சொத்து பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில தசாப்தங்களாக, இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது, இது பெரும்பாலும் தனியார் துறையில் உள்ளது. பொது சுகாதார அவசரகாலத்தின் இந்த நேரத்தில், உற்பத்தி வசதிகளை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதி மற்றும் பிற சலுகைகளை மத்திய அரசு உடனடியாக வழங்கி ஆதரவளிக்க வேண்டும். கூடுதலாக, கட்டாய உரிம விதிமுறை சட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன், இதனால் பல நிறுவனங்கள் உரிமம் பெற்று தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயைக் கையாள்வதற்கான மருத்துவ விஷயத்தில் இது முன்னர் நடந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன். கோவிட் -19 ஐப் பொருத்தவரை, இஸ்ரேல் ஏற்கனவே கட்டாய உரிமம் வழங்கும் விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவும் இதை விரைவாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதாக நான் உணர்கிறேன்.
  • ஐந்தாவது, உள்நாட்டு தடுப்பூசி குறைவாக இருப்பதால், ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் அல்லது யு.எஸ்.எஃப்.டி.ஏ போன்ற நம்பகமான அதிகாரிகளால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் உள்நாட்டு சோதனைகளுக்கு வற்புறுத்தாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். நாம் முன் எப்போதும் கண்டிராத அவசரநிலையை எதிர்கொள்கிறோம், அவசரகாலத்தில் இதுபோன்ற தளர்வு நியாயமானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் உள்நாட்டு சோதனைகள் முடிக்கப்படும் காலம் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த தளர்வு வழங்கவேண்டும். அத்தகைய தடுப்பூசிகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த தடுப்பூசிகள் வெளிநாட்டில் வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதை முறையாக எச்சரிக்கலாம்.

எத்தனை பேருக்கு கோவிட் 19 க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது என்பதை விட மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு போடப்பட்டது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போடும் முயற்சியை அதிகரிக்க வேண்டும். தற்போது இந்திய மக்கள் தொகையில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சரியான கொள்கையை கடைபிடிப்பதன் மூலம் இதனை விரைவாக செயல்படுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொண்டு அவை மீது உடனடியாக செயல்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.