ராசாவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்துக் கடிதம்

சென்னை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2 ஜி வழக்கில் உண்மை வென்றதாக ராசாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்

சென்ற டிசம்பர் 21 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கியது.   அரசு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறி விட்டதாக கூறிய நீதிபதி முன்னாள் அமைச்சர் ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.    அதன் பின் பல சமயங்களில் ராசா வழக்கு விசாரணை குறித்து பேசி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2 ஜி வழக்கைப் பற்றி சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என ராசா குற்றம் கூறினார்.     அத்துடன் மன்மோகன் எதையும் சரியாக செய்யவில்லை எனவும் அதனால் அதன் விளைவே அவரே இறுதியில் அனுபவித்தார் என கூறினார்.  அத்துடன் டிசம்பர் 26 அன்று மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.  அதில், “இந்த 2 ஜி வழக்கால் நான் பல இன்னல்களை அனுபவித்தேன்.   சில அமைச்சர்களே எனக்கு எதிராக செயல் பட்டனர்.  நீங்கள் நேரடியாக எங்களுக்கு வெளிப்படையான ஆதரவு அளிக்கவில்லை.:  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகன் சிங் தற்போது ராசாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.  அதில், “ராசாவும் அவர் குடும்பத்தினரும் 2 ஜி வழக்கால் கடும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.   அவர் இந்த வழக்கில் இருந்து விடுபட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.    ராசாவின் கூற்று நிரூபணமாகி உண்மை வென்றுள்ளது.  புத்தாண்டு வாழ்த்துக்கள்” என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.