மன்னார்குடி : பொன் ராதாகிருஷ்ணன் கார் முன் மக்கள் போராட்டம்

ன்னார்குடி

ன்னார்குடியில் மின்சாரம் கிடைக்காததால் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை முற்றுகை இட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தை கடுமையாக தாக்கிய கஜா புயலால் லட்சக்கணக்கான மின் கம்பங்கள் தூக்கி எறியப்பட்டன. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்துள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து உண்ண உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலர் அரசு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நிவாரணப் பணிகள் நடடைபெற்று வந்த போதிலும் தேவையான அளவு விரைவாக நடைபெறவில்லை என பலரும் குறை கூறி வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம் வழங்குவது இன்னும் சீரடையவில்லை.  போதுமான அளவு மின் கம்பங்கள் இருப்பில் இல்லாததால் தாமதம் உண்டாவதாக மின்வரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் சிறிது தூரத்தில் உள்ள நெடுவாக்கோட்டையில் மின் கம்பங்கள் உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆகையால் அவற்றை எடுத்து வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதே சாலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பயணம் செய்த கார் வந்தது.

மக்கள் அந்த காரை மறித்து போராட்டம் நடத்தினர். அதைக் கண்ட அமைச்சர் காரில் இருந்து இறங்கி மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அத்துடன் மின்கம்பங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். அதனால் மக்கள் சாலை மறியலை கை விட்டனர்.