உயிருள்ளவரை மனோகர் பாரிக்கர்தான் கோவா முதல்வர் : துணை சபாநாயகர் திட்டவட்டம்

னாஜி

கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் உயிருடன் உள்ளவரை நீடிப்பார் என அம்மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறி உள்ளார்.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கபட்டுள்ளார். அவருக்கு கோவா, டில்லி, மும்பை மற்றும் நியுயார்க் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் மனோகர் பாரிக்கர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மைக்கேல் லோபோ

கோவா மாநிலத்தின் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ இன்று தனது தொகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது அவர், “கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் எப்போதுமே ஓய்வை விரும்பாமல் உழைத்து வருபவர் ஆவார். அவர் என்றென்றும்  கோவா மக்களுக்காக உழைக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே உள்ளவர் ஆவார்.

அவரது உடல்நிலை குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது. அவரது உடல்நிலை சீரடைவது கடவுள் கையில் உள்ளது. மனோகர் பாரிக்கர் உயிருள்ள வரை கோவா முதல்வராக நீடிப்பார். ஒருவேளை அவருக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் எனபதை அப்போது பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.