காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் 2வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா தற்போது பதவியேற்றார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  கொண்டு வரப்பட்டது.

3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31ம் தேதி ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமிக்கப்பட்டார். 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பணியாற்றிய மர்மு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அவர் அளித்தார். அதை  ஏற்றுக் கொண்ட ராம்நாத் கோவிந்த், புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமித்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா தற்போது பதவியேற்று கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காஷ்மீர் இந்தியாவின் சொர்க்கம், இங்கே ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஒரு முக்கியமான தேதியாகும். பல திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எனது முன்னுரிமை. யாருக்கும் எதிராக எந்த சார்பும் இருக்காது. அரசியலமைப்பு அதிகாரங்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படும். வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எனது நோக்கம் என்று கூறினார்.