போபால்: தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களைத் தட்டியுள்ளார் வீராங்கனை மனு பாகர். இவர் ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் கலந்துகொண்டார்.
அதில் 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்றார் மனு பாகர்.

இறுதிப்போட்டிக்கான சீனியர் பிரிவு தகுதிச் சுற்றில் 588 புள்ளிகள் பெற்று தகுதிபெற்றார். இறுதிச்சுற்றில் மொத்தம் 8 வீராங்கனைகள் பங்க‍ேற்றனர். இதில், மனு பாகர் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 243 புள்ளிகளைப் ப‍ெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.

இதுமட்டுமின்றி, ஜூனியர் தனிநபர் பிரிவிலும் பங்கேற்றார் மனு பாகர். இதிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனிஷ் பன்வாலா என்ற 17 வயது வீரர், பல்வேறு பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 4 பதக்கங்களை வென்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.