சண்டிகர்:

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கணை மானு பேகர் தங்கம் வென்றார். அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், சேவாக் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரது சந்தை ராம் கிஷான் பேக்கர் கூறுகையில், ‘‘எனது மகள் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒரு வெற்றிக்கு பின்னர் பெருமை கொள்வது எளிமை. ஆனால், உண்மை என்னவென்றால், எந்த போட்டியில் கலந்துகொண்டாலும் வெறும் கையுடன் திரும்பும் பழக்கம் மானுவிடம் கிடையாது.

அவர் கோல்டு கோஸ்ட் செல்வதற்கு முன்பு போட்டியை மகிழ்ச்சியுடன் அனுபவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். முடிவு குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தேன். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. அவர் எதையும் மன அழுத்தத்துடன் எதிர்கொள்ளமாட்டார். எப்போது சுதந்திரமான மனநிலையுடன் தான் விளையாடுவார்.

ஒட்டுமொத்த போட்டியிலும் கவனம் செலுத்தாமல் ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் கவனம் செலுத்துவார். ஒவ்வொரு ஷாட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவார். ஹரியானா மாநிலத்தில் உள்ள சொத் கிராமமான கோரியாவுக்கு அவர் வரும்போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.