பாட்னா,

பீகார் முன்னாள் முதல்வரான ராப்ரி தேவி, நிகழ்ச்சி ஒன்றி பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களின் கையை வெட்டுவோம் என்று பாஜகவினர் கூறியதற்கு பதிலடி கொடுத்தார்.

அப்போது, மோடியின் கழுத்தை வெட்ட பீகார் மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராப்ரிதேவியின் இந்த ஆவேச பேச்சு பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ராஷ்டிரியா ஜனதாதள ஆதரவுடன் நடைபெற்று வந்த ஆட்சி, பின்னர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருக்கான தேர்தலில், லல்லுபிரசாத் யாதவ் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் லல்லுவின் மனைவியும், முன்னாள் பீகார் முதல்மந்திரியுமான ராப்ரி தேவி பேசினார்.

அப்போது,   பிரதமர் மோடியை குற்றம்சாட்டி அவருக்கு எதிராக விரலை நீட்டுபவர்களின் விரல்களையும், கையையும் சேர்த்து வெட்ட வேண்டும் முன்னர் பீகார் மாநில பா.ஜ.க. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நித்யானந்த ராய் தெரிவித்திருக்கிறார். அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த ராப்ரி தேவி,

அப்படி செய்து பாருங்கள், நாட்டில் யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீகார் மக்கள் எதுவும் கூற மாட்டார்களா? பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகாரில் பல மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக மக்களை அவர்கள் சிறையில் தள்ளலாம். பீகார் மக்கள் ஒன்றாக சேர்ந்து சிறைக்கு செல்வார்கள்.

எங்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டு நான் அஞ்ச மாட்டேன். அமலாக்கத்துறை ஆகட்டும், வருமான வரித்துறை ஆகட்டும், சி.பி.ஐ. ஆகட்டும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடத்தை என்னவென்று எனக்கு தெரியும். இவற்றை வைத்து என்னை வீழ்த்திவிட முடியாது.

எத்தனை நோட்டீஸ்களை வேண்டுமானாலும் அவர்கள் அனுப்பட்டும்.

இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்பதை மத்திய அரசும் இங்குள்ள மாநில அரசும் தெரிவிக்க வேண்டும்

என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்பினால் பாட்னாவுக்கு வந்து என்னிடம் கேள்வி கேட்கட்டும் நான் பதில் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.