தண்ணீர் பிரச்சினை: சென்னையில் பல பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் அவலம்!

சென்னை:

ண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் ஏதும் மூடப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் பள்ளி நேரத்தை பாதியாக குறைத்துள்ளது.

தண்ணீர் இல்லாததால் கழிவறை செல்லும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தொற்று நோயில் இருந்த பாதுகாக்கும் வகையில் குரோம்பேட்டை ராமகிருஷ்ணா பள்ளி உள்பட  பல தனியார் பள்ளிகள்  அரைநாள் மட்டுமே செயல்படும் என்று பெற்றோர்களுக்கு குருந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி உள்ளன.

பள்ளிக்குழந்தைகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலையில்,  மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டி யுள்ளது. சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையின் முக்கிய  குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.  இதன் காரணமாக  ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இதற்கிடையில் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக சென்னையில் சில பள்ளிகள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியானது.  கோடை விடுமுறைக்கு பின்தற்போது பள்ளிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து 100 டிகிரி பாரன் ஹீட்டிற்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் பாதிப்பிற்காளாகியுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருவதால், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்பட பல அரசு பள்ளிகளில் கை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் திண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

சென்னையில் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்ட் கேர்ல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் சுமார்  2600 மாணவிகள் பயின்று வரும் நிலையில், தண்ணீர் இல்லாத காரணத்தால் அரைநாள் மட்டுமே பள்ளி செயல்படுவதாக அவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் அனுப்பி உள்ளது.

அதுபோல குரோம்பேட்டையில் உள்ள பிரபலமான ராமகிருஷ்ணா சிபிஎஸ்இ பள்ளியும், அரை நாள் மட்டுமே செயல்படும் என குறுந்தகவல் அனுப்பி உள்ளது. இதுபோல பல தனியார் பள்ளிகள் தண்ணீர் பிரச்சினை காரணமாக முடப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எந்தவொரு பள்ளியும் தண்ணீர் பிரச்சினையால் மூடப்பட வில்லை, சென்னையில் தண்ணீர் பிரச்சினையே கிடையாது… ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்கி வருகின்றன என்று வாய்ஜாலம் காட்டுகின்றனர்.

பள்ளிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை அரசால் சரி செய்ய முடியவில்லை என்றால், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாவது மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தண்ணீர் பிரச்சினையில் அரசு கவுரவம் பார்க்காமல் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.