சென்னை,

நாடு முழுவதும் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும்தான் ஞாபகத்துக்கு வரும்.

ஆனால், காற்று மாசு காரணமாக டில்லி உள்பட சில நகரங்களில் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல கட்டுப்பாடுகளை  சென்னை நகர போலீசார் விதித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

மருத்துவமனை அருகிலோ, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ பட்டாசு வெடிக்க கூடாது.

குடிசைப் பகுதி உள்ள இடங்களில் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ராக்கெட் வெடி வெடிக்ககூடாது.

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அருகில் நின்றுகொண்டு கவனித்துக்கொள்ள வேண்டும்.

அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலும் பட்டாசு வெடிக்க கூடாது.

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் குடிசைப்பகுதி அதிகம் உள்ள 100 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  வெளிமாவட்டங்களில் இருந்து 500 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 500 தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.