ரூர்கேலா, ஒரிசா

மோடியை சந்திக்க 1500 கிமீ நடைபயணம் மேற்கொண்ட முக்திகாந்தா பிஸ்வால் ரூர்கேலா தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் ரூர்கேலா நகரில் உள்ள இஸ்பாட் பொது மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக மற்றப்படும் என்பதும் ஒரு வாக்குறுதி ஆகும். மோடி பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போல் இந்த வாக்குறுதியையும் மோடி நிறைவேற்றவில்லை.

மோடியின் வாக்குறுதியை அவருக்கு நினைவு படுத்த 31 வயதான மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முக்திகாந்தா பிஸ்வால் டில்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். அவர் 71 நாட்களில் சுமார் 1500 கிமீ தூரத்தை கடந்தார். டில்லியை அடையும் முன்பு ஆக்ராவில் மயங்கி விழுந்த அவர் ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடல்நிலை தேறி டில்லி செல்லும் போது மோடி அங்கு இல்லாததால் அவரால் மோடியை சந்திக்கையலவிலை.  தற்போது ரூர்கேலா தொகுதியின் சட்டப்பேரவை வேட்பாளராக பிஸ்வால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர் சப்யாச்சி பண்டாவின் மனைவி சுபஸ்ரீ பண்டா ராண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இவர்களைத் தவிர முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்த வாதியான தண்டபாணி மொகந்தியின் மகன் சங்க்ராம் மொகந்தி சுருதா சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இயங்குகிறார்.