மாறன் பிரதர்ஸ் மீதான சட்டவிரோத தொலைபேசி வழக்கு: 22ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை:

ட்டவிரோத தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கின் விசாரணை வரும் 22ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த மாதம் 14ந்தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று அறிவித்த நிலையில், வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக காங்கிரஸ் ஆட்சியின் போது கூட்டணி கட்சியான  திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, சென்னை போட் கிளப்பில் வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து, அதன்மூலம் தனது சகோதரர் நிறுவனமான சன்டிவி நிறுவனத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக உபயோகப்படுத்தி  வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட முடியவில்லை என்ற காரணத்தால்,  மாறன் பிரதர்ஸ் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும்  சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.

ஆனால், அதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், மாறன் பிரதர்ஸ் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 14ம் தேதி முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்த நிலையில், பல்வேறு காரணங்களால் விசாரணை மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மாறன் பிரதர்ஸ் கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் 22ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.