செய்தியாளர் செல்போனை பறித்த மாறன் வழக்கறிஞர்

சென்னை:

குற்றப்பத்திரிகை நகலை பெற நீதிமன்றத்துக்கு வந்த மாறன் சகோதரர்களின் வழக்கறிஞர், செய்தியாளரின் செல்போனை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2004-07ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் கே.எஸ். ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர்.

இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு டெல்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சென்னை சிபிஐ 14-ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல் 3-இல் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற நேரில் ஆஜராகினர்.

அப்போது, குற்றப்பத்திரிகை நகல் தயாராகவில்லை, விசாரணை மே 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர். இதனால் அடுத்த விசாரணையை இன்று ஒத்திவைத்து, நீதிபதி எஸ். நடராஜன் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவின்படி இன்று ஆஜரான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட 7பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கபட்டது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு நீதிமன்றத்தை விட்டு மாறன் சகோதரர்கள் வெளியே வந்தனர். அப்போது ஊடகங்களைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் மாறன் சகோதரர்களை படம் எடுத்தனர். செய்தியாளர் ஒருவர் தனது செல்போன் கேமராவில் படம் எடுத்தார்.

அப்போது மாறன் சகோதரர்களின் வழக்கறிஞர், செய்தியாளரின் போனை பிடுங்கி வைத்துக்கொண்டார். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.