முதல் பாடல் கம்போஸிங். மனைவிக்கு தலைபிரசவம் மறக்கமுடியாத மார்ச் 10, 1980

ண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் சினிமாவை கைக்குள் வைத்திருந்த பாடலாசிரியர் என்று கவிப்பேரரசு வைரமுத்துவை சொல்லலாம்.

சினிமா பாடல் ஆசிரியராக கவிப்பேரரசுவுக்கு வயது- 40.
1980 ஆம் ஆண்டு மார்ச், 10- ந்தேதிதான் ‘பொன்மாலை பொழுது’’ உதயமானது. சினிமாவில் அவரது முதல் பாடல்.

அப்போது வைரமுத்து, தமிழக அரசின் மொழியாக்க குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
கிரிமினல் விதிமுறைகள் உள்ளிட்ட சட்ட விவரங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி.

திரைப்படங்கள் மூலமாக தனது கவிதை ஆற்றலை வெளிக்கொணர சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்தார்.
நண்பர் ஒருவர் மூலம் இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது.

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சென்னையில் உள்ள அட்லாண்டிக் ஓட்டலுக்கு வருமாறு வைரமுத்து பணிக்கப்பட்டிருந்தார்.
தலைப்பிரசவத்துக்காக கவிஞர் மனைவி அன்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார். மருத்துவரிடம், மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி விட்டு, அட்லாண்டிக் ஓட்டல் சென்றார் வைரமுத்து.
அறை எண்-410.
;நிழல்கள்’ படத்தின் பாடல் கம்போசிங்.
இசைக்கருவிகள் மத்தியில் இளையராஜா. பாடலுக்கான சூழலை பாரதிராஜா விவரிக்க, ‘’ஹே ஹோ ஹா லலலா..இது ஒரு பொன்மாலைப்பொழுது’’ என வைரமுத்து 30 நிமிடங்களில் பாடல் வரிகளை கொட்ட-
அன்று உதயமானார்-சினிமா பாடலாசிரியர் வைரமுத்து.

அன்று தொடங்கி இளையராஜாவுடன் 1989 ஆம் ஆண்டு வரை 250 பாடல்கள் தீட்டியுள்ளார்.

7 முறை மத்திய அரசின் தேசிய விருது பெற்ற ஒரே இந்தியக்கவிஞர் வைரமுத்து மட்டுமே.
இது தவிர 6 முறை மாநில அரசு விருது வாங்கியுள்ளார்.

‘காதல் ஓவியம்’ மற்றும் ’மண்வாசனை’ ஆகிய இரு படங்களில் இவருக்கு நடிப்பு வேடம் தேடி வந்தது. ஆனால் பாரதிராஜாவின் அந்த அழைப்பை வைரமுத்து நிராகரித்து விட்டார்.

அவரை அரசியலில் இழுக்கவும் முயற்சி நடந்தது.

‘’அதற்கு வேறு ஆளை பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று தன்னை அழைத்தவர்களுக்கு, நாசூக்காக பதில் சொல்லி அதனையும் நிராகரித்து விட்டார்…

-ஏழுமலை வெங்கடேசன்