சென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக 2020ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி கண்டறியப்பட்டது.

ஓராண்டை கடந்தும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. இடையில் கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா தொற்று உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்து,  தொற்று பரவல் மேலும் வராமல் தடுக்கும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாகமேற்கொண்டன.

இந்தியாவிலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு (பொதுமுடக்கம்)  அமல்படுத்தப்பட்டது.

முதல்கட்டமாக சுமார் 2 மாதங்கள் நீடித்த இந்த பொதுமுடக்கம் 2020 ஜூன் மாதம் முதல் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத் தில்  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799 ஆகவும், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 4,706 ஆகவும் இருந்தது.

தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும்,  மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் அவ்வப்போது சில தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தன.  தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின. இருந்தாலும்,   நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட அனுமதி வழங்கினாலும்,  வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. பின்னர், சிறிது சிறிதாக போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பேருந்து ரயில் மற்றும்  விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பேருந்து, ரயில் சேவைகள் முழுமையாக இயங்காததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் மற்றும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களை திறக்கவும் இருந்து வரும் தடையை மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீடித்து வருகிறது.  இன்னும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை.

கொரோனா  தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தற்போது தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் தற்போது உருமாறிய நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியாத நிலை, ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, நாளையுடன் ஓராண்டு நிறைவு செய்கிறது. கடந்த  2020ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி முதன்முறையாக தமிழகத்தில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.

இவர், ஓமனில் இருந்து தமிழகம் திருமபிய நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு,  சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.