மார்கழி பிறந்தது: அதிகாலையிலேயே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடக்கம்

சென்னை:

மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறி உள்ளார். தமிழ் மாதங்களில் தனுர் மாதம் என்றழைக்கப்படுவது மார்கழி . வடமொழியில் மார்கழி மாதத்தை மார்கசீர்ஷம்  என்று அழைக்கப்படுகிறது. .மார்கம் என்றால் வழி என்று பொருள் , சீர் என்றால் தலை சிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள் இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி விளங்குறது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாய் என மார்கழியின் பெருமையை விளக்குகிறார் ஆண்டாள். போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய் என்கிறார் திருவெம்பாவையில் மாணிக்க வாசகர்.  இது தேவர்களின் மாதம் என்று ம் கூறப்படுவது உண்டு.

மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது.இறைவழிபாட்டில் ஈடுபட்டு இறைவனின் அருளை பெற வேண்டிய மாதம் மார்கழி ஆகும்.

இவ்வளவு சிறப்புமிக்க மார்கழி மாதம் இன்று சிறப்பாக தொடங்கி உள்ளது. இதையொட்டி வீடுகளில் வண்ண வண்ணக் கோலமிட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, மலர்களால் அலங்கரிக்கின்றனர்.  தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று இரவு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.  கொட்டும் பனியையும் கடுங்குளிரையும் பொருட் படுத்தாமல் அதிகாலையிலேயே ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திரண்டிருந்தனர்.

சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் அதிகாலை யிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் பஜனை பாடி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர்.

பொதுவாக  மார்கழி மாத வைகறை பொழுதான அதிகாலைநேரத்தில் துயில் கலைந்து குளித்து வழிபாடு செய்வது அறிவியல் ரீதியாக நமது உடலுக்கும், மனதுக்கும் நல்லது.  இதனால் புத்துணர்ச்சி பொங்கும்.

அதே வேளையில் இந்த மாதம் பொழியும் அதிகாலை பனி பொழிவானது நம் மனதையும், ஆரோக்கியத்தையும்  திடமடைய செய்கிறது.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 முதல் 6 மணி வரை ஓசோன் படலத்தின் தூய்மை யான காற்று பூமியில் அதிகளவு பரவும் அதனை நாம் சுவாசிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு மனத் தெளிவு ஏற்படும்.

இதனால் தான் அறிவியல் மதிப்புக்குரிய மாதமாக மார்கழி திகழ்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் மார்கழியில் பாவை நோன்பு ,திருவெண்பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடு வர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மார்கழி மாதத்தின் முக்கிய விரதங்கள் :

திருவாதிரை,வைகுண்ட ஏகாதேசி,அனுமன் ஜெயந்தி ,பாவை நோன்பு,திருவெண்பாவை நோன்பு,படி உற்சவம்,விநாயகர் சஷ்டி விரதம் போன்ற விரதங்கள் இம்மாதத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் விரதங்கள் ஆகும்.