‘கர்ணன்’ சர்ச்சைக்கு கிண்டலாகப் பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்…!

‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .இவர்களுடன் இப்படத்தில் லால், யோகி பாபு , லட்சுமி பிரியா , கெளரி கிஷன் இணைந்துள்ளனர் .

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணியாச்சி சாதிக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்றும் கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

இந்த அறிக்கை நேற்றிரவு (பிப்ரவரி 19) சுமார் 8 மணியளவில் வெளியானது. அடுத்த ஒரு மணிநேரத்தில் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “’கர்ணன்’ ரிலாக்ஸ் டைம்” என்று பதிவிட்டு, கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.