சென்னை: மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 900 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் கடை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

சென்னை முக்கிய அடையாளம் மெரினா கடற்கரை.  இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெயருக்கும் சொந்தமானது. இங்கு சாலையோரம் மட்டுமின்றி, மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தின்பண்டங்கள் மற்றும் விளையாட்டுகள் என பலதரப்பட்ட சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி சுற்றுலாவாசிகளுக்கும் இடைஞ்சலாக இருந்து வந்தது.

இதையடுதது,  கடற்கரையில் உள்ள கடைகளை  ஒழுங்குப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து  ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் அக்னி கோத்ரி தலைமையில், தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி மெரினா கடற்கரையில் 900 கடைகளை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என உத்தரவிட்டது.

ஏற்கனவே மெரினா கடற்கரையில் 1,500 கடைகள் மாநகராட்சி அங்கீகாரம் பெற்று நடத்தப்பட்டு வந்த நிலையில், அவற்றை 900 ஆக குறைத்தது மட்டுமின்றி அவற்றில் 40% கடைகளை வெளி நபருக்கு வழங்கும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,  900 ஸ்மார்ட் கடைகள் குலுக்கல் மூலம் ஒதுக்க சென்னை மாநகராட்சி அறிவித்தது.

அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. , மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் செய்தவர்கள் மற்றும் புதிதாக கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கடைகள் ஒதுக்கப்படுகிறது.

ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு (அ)  60 சதவீதம் என்ற அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக கடை நடத்த விரும்புபவர்களுக்கு (ஆ)  40 சதவீதம் அடிப்படையில் 360 கடைகளும் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

‘அ’ வகையில் 1351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு 1348 விண்ணப்பங்களும், ‘ஆ’ வகையில் 14,827 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து 12,974 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த  விண்ணப்பங்கள் அனைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி ‘அம்மா’ அரங்கில் இன்று காலையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெற்றது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயரினை எழுதி போட்டு குலுக்கல் முறையில் கடைகளை தேர்வு செய்தனர். ஏற்கனவே மெரினாவில் கடை வைத்தவர்களுக்கு காலையில் குலுக்கல் நடந்தது.  மாலையில் புதிதாக கடை வைக்க விண்ணப்பங்கள் கொடுத்தவர்களில் 360 பேருக்கு கடைகள் ஒதுக்கப்படுகின்றன.

தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள 900 பேருக்கும் மெரினாவில் எந்தெந்த இடங்களில் கடைகள் ஒதுக்குவது என்பதையும் குலுக்கல் முறையில் நாளை (21-ந்தேதி) தேர்வு நடக்கிறது.

இன்றைய குலுக்கலில் பெரும்பாலான வியாபாரிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மெரினா காமராஜர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அயோத்தியா நகர் பகுதியில், மெரினா கடற்கரை மணல் பரப்பு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவருக்கும் கடை ஒதுக்க வேண்டும் என்று பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.