கடலுக்குள் இறங்கி கைகோர்த்து நிற்கும் இளைஞர்கள்! தடியின்றி சென்றிருக்கும் காவல்துறை

 

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் பலர், காவல்துறையின் வேண்டுகோளை மீறி  கடலில் இறங்கி கைகோர்த்து நிற்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்திருப்பதாகவும் இனி தடை இருக்காது என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். ஆனால் இதை ஏற்கமல் நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரி, ல இளைஞர்கள் பலர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் “ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இது வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரம். போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லுங்கள்” என்று காவல்துறையினர் மைக்கில் அறிவித்தனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான அவசர சட்டத்தின் நகலையும் அவர்களிடம் அளித்தனர்.

இதை ஆரம்பத்தில் இளைஞர்கள் எவரும் இதை ஏற்கவில்லை. காவல்துறையினர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இன்று காவலர்கல் தடி எடுத்துச் செல்லவில்லை. கைகளால் இளைஞர்களை கலைந்து செல்லும்படி லேசாக தள்ளினர்.

இந்த நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் கலைந்து சென்றனர். இவர்களில் சிலர், தேசியகீதத்தை பாடி கலைந்துசென்றனர்.

ஆனால் சுமார் ஐநூறு இளைஞர்கள், “சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்த சட்ட முன்வடிவு வரும் வரை.. அதாவது நாளை வரையாவது நாங்கள் போராட வேண்டும். காவல்துறை அளித்துள்ள சட்டமுன்வடிவு நகலை படித்துப் பார்க்க வேண்டும், வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க வேண்டும்” என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தனர்.

அவர்களை வலுக்கட்டாயமா கலைக்க காவல்துறையினர் முயன்றனர்.  உடனே அவர்கள் கடலுக்குள் சென்று நின்றனர். வேறு பல இளைஞர்கள் கடலை ஒட்டி கைகோர்த்து மனித சங்கிலி போல நிற்கிறார்கள். அதாவது விவேகானந்தர் இல்லத்துக்கு எதிராக உள்ள கடற்பகுதியில் இந்த இளைஞர்கள் கைகோர்த்து நிற்கிறார்கள்.

தற்போது அவர்களிடம் மீண்டும் காவல்துறையினர் அமைதியான முறையில் கலைந்துசெல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.