ஜல்லிக்கட்டு தடையை போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளேயற்றி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவித்ததால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை. இதைப்போக்க, இளைஞர்கள் தமிழகம் முழுதும் போராடி வருகிறார்கள்.

சென்னை கடற்கரையிலும் லட்சணக்கான இளைஞர்கள் பகல் இரவு என்று தொடர்ந்து அங்கேயே கூடி போராடி வந்தார்கள். தற்போதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கே குழுமியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, தமிழக அரசே அவசர சட்ட முன்வடிவை தயாரித்துள்ளது. இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தில் இது நிறைவேற்றப்படும் என்றும்  இனி ஜல்லிக்கட்டுக்கு தடை இருக்காது என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசின் காட்சி விலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும், மத்திய அரசு நிரந்தர சட்டமொன்றை இயற்ற வேண்டும் என்று இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மெரினா கடற்கரையில் தற்போது  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மெரினாவில் இதுவரை போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்துவந்த காவல்துறை, இன்று காலை அவர்களை கலைந்து செல்லும்படி மைக் மூலம் அறிவிக்க ஆரம்பித்துள்ளது. அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

பல இளைஞர்கள், வெளியேறி வருகிறார்கள். ஆனால் சில இளைஞர்கள், இதை ஏற்கவில்லை. ஆகவே அவர்களை வலுக்கட்டாயமாக கலைக்கும் பணியல் காவல்துறை ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் பலர், கடலில் முழங்கால் அளவு நீரில் இறங்கி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.

சிலர் படகுகளில் கறுப்புக்கொடியை உயர்த்திப்பிடித்தபடி உலா வரகிறார்கள். கடற்கரையில், காவல்துறைக்கும் இளைஞர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் மெரினா பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.