மும்பை கடற்கரையில் ரூ. 90 லட்சம் செலவில் நவீன இலவச கழிப்பறை

மும்பை

மும்பை நகரின் மரைன் டிரைவ் கடற்கரையில் ரூ. 90 லட்சம் செலவில் நவீன இலவச கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மும்பை நகரின் மரைன் டிரைவ் கடற்கரை மிகவும் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றாகும்.   இங்கு ஏராளமானோர் உடற்பயிற்சிக்காக ஓட்ட பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி எடுப்பவர்கள் உள்ளனர்.  இவர்களின் வசதிக்காக தற்போது நவீன இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர், “மும்பை நகரின் மரைன் டிரைவ் கடற்கரையில் வாக்குவம் தொழில்நுட்பம் மற்றும் சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்ட நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.   சுமார் ரூ.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறைகள் இங்கு வரும் ஓட்ட பயிற்சியாளர்கள் மற்றும் சைக்கிள் பயிற்சியாளர்களுக்கு மிகவும் உபயோகமாக அமையும்.

சிவசேனாவின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரே வரும் திங்கட்கிழமை ஆறு பிளாக்குகள் கொண்ட இந்த கழிப்பறையை மக்கள் உபயோகத்துக்கு அளிக்க உள்ளார்.   சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறைகள்  ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், சாமாடெக் ஃபவுண்டேஷன், நாரிமன் பாயிண்ட் குடிமக்கள் சங்கம் ஆகியோரின் நிதி உதவியால் அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமான கழிவறையில் ஒவ்வொரு முறையும் 8 லிட்டர் தண்ணீர் உபயோகமாகும் வேளையில் இந்த கழிப்பறையில் 800 மிலி தண்ணீர் மட்டுமே தேவைப்படும்.   அது மட்டுமின்றி வாக்குவம் தொழில் நுட்பத்தினால் திடக் கழிவுகள் மரைன் டிரைவ் கடற்கரையில் நேரடியாக கலக்கப்படுவது முழுவதுமாக குறையும்” என தெரிவித்துள்ளார்.