மெல்போர்ன்: ‘பாக்சிங் டே’ தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டியை, மெல்போர்ன் மைதானத்தில் நடத்தாமல் வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் டெய்லர்.

இந்தாண்டு இறுதியில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 26-30 தேதிகளில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் மார்க் டெய்லர் கூறியுள்ளதாவது, “கிறிஸ்துமஸ் காலக்கட்டதில் மெல்போர்ன் மைதானத்தில் போதியளவு ரசிகர்கள் வரமாட்டார்கள். அதிகபட்சம் 20 ஆயிரம் பேர் வரை வருவதற்கு வாய்ப்புள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தை, இந்தளவிற்கு குறைந்த ரசிகர்களை வைத்துக்கொண்டு நடத்துவது சரியாக இருக்காது. இதே போட்டியை அடிலெய்டு அல்லது பெர்த் மைதானங்களில் நடத்தினால், அதிகக் கூட்டம் ஆர்ப்பரிக்கும்.

மேலும், அடிலெய்டில் இந்தியாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இந்த மைதானத்தில் நடந்த லீக் போட்டிக்கு கூடிய கூட்டத்தை நாம் மறந்துவிடலாகாது” என்றார்.