சென்னை:

தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, திருமணம் செய்து, தவிக்க விட்டு வந்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக அவரது நண்பரான மற்றொரு தொழிலதிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கம் அருகே உள்ள சூளையில் வசித்து வருபவர், தொழிலதிபர் மனோஜ் ஜெயின்.  இவர் கடந்த 2011ம் ஆண்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது அங்கு உள்ள விடுதி ஒன்றில், நாருமோன் ஜெப்பை என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களுக்கிடையே அன்னியோன்யம்  ஏற்பட அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு சென்னை திரும்பி உள்ளார். பின்னர் அடிக்கடி தாய்லாந்து சென்று அந்த பெண்ணிடம் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த  2017-ஆம் ஆண்டில் இருவருக்கும் தாய்லாந்தில் பதிவு திருமணம் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய மனோஜ் ஜெயின் சென்னை திரும்பி உள்ளார். அதன்பிறகு, தாய்லாந்து செல்வதை தவிர்த்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், தன்னை திருமணம் செய்துகொண்டதற்கான சான்றிதழ் மூலம் நியாயம் கோரிய ஜெப்-ஐ மனோஜை ஜெயினின் நணபர் விகாஸ் கோத்தாரி  மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட தாய்லாந்து பெண் சென்னை காவல் ஆணையருக்கு பாங்காங் தூதரகம் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையின்  பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு விசாரணை போலீசார்,  திருமண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் மனோஜ் ஜெயின் மற்றும் விகாஷ் கோத்தாரி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.