Married too young or have more than 2 kids? Don’t hope for a govt job in Assam

சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்வோருக்கும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அஸ்ஸாம் அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான புதிய கொள்கை முடிவுக்கான வரைவை, அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மக்கள்தொகைக்கான புதிய கொள்கையின் வரைவை வெளியிட்டு, அதற்கான காரணங்களை விளக்கி உள்ளார்.

அஸ்ஸாம் அரசின் மக்கள் தொகைக்கான இந்த புதிய வரைவுக் கொள்கையில், பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட வேறு பல சலுகைகளும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் பிஸ்வா சர்மா கூறியுள்ளார். ஆனால், சட்டப்படியான திருமண வயதுக்கு முன்பாகவே மணம் செய்து கொள்வதைத் தடுக்கவும், அதிக குழந்தைப் பேறைத் தடுக்கவும் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என்ற திருமணத்திற்கான வயது வரம்பை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சட்டப்படியான திருமண வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்வோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை என்ற தற்போதைய சட்டத்தை, 4 ஆண்டுகளாக அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஹிமர்ந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷில் இருந்து ஊடுருவும் பெங்காலி பேசும் இஸ்லாமியர்களின் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவே அஸ்ஸாம் அரசு இந்த புதிய கொள்கையை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1970களுக்குப் பின்னர், பங்ளாதேஷில் இருந்து ஊடுருவும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், புதிய பாஜக அரசு இத்தகைய கொள்கை முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அஸ்ஸாமில் உள்ள 9 மாவட்டங்களில் பங்களாதேஷில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களே பெருமளவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கல்வியறிவு இல்லாததால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாகவும் விமர்சனம் உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக அதிகரித்திருப்பதால், அதனைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.