சென்னை:

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை தொடர்ந்து, அவரது நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டன.

மேலும் அவரது மனைவி நடத்திவரும் ஹோமியோபதி கல்லூரியில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, கல்லூரியின் கேஷியர் பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி பழனிச்சாமி உடல் காரமடை எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகேயுள்ள குட்டையில்  சடலமாக கிடந்தது. அவரது உடலில் பல காயங்கள் இருந்தன. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்த விவகாரத்தில்காவல்துறையினர் கேஷியர் குடும்பத்தினருடன் பண பேரம் பேசியதாக அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, பழனிச்சாமியின் மகன் ரோஹன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனது தந்தையின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டது.

மேலும், வழக்கை மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும் மறு உடற்கூறாய்வு குறித்து குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடமே முறையிட வேண்டும் என்றும், பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை காண குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.