வீரமரணம் அடைந்த பழனியின் மனைவிக்கு ஆசிரியை பணி… பணி ஆணை வழங்கினார் எடப்பாடி…

சென்னை:

டாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன வீரர்களுடனான போரின்போது, வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு, அவர் விரும்பிய ஆசிரியைப் பணி ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

ஜூன் 15ம் தேதி அன்று, காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி யில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவரது உடல், சொந்த ஊரான மதுரை  அருகே உள்ள கடுக்கலூர் வந்தடைந்தது.

முன்னதாக, வீரமரணம் அடைந்த பழனியின் உடலானது, மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அதற்கு மதுரை கலெக்டர் வினய் மற்றும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், முப்படை உயரதிகாரிகள், எம்எல்ஏ சரவணன், மற்றும் போலீஸ் உயரதிகாரிகளும் தங்களுடைய மரியாதையை செய்தனர்.

பின்னர் அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, இந்திய தேசியக் கொடி போர்த்தப் பட்டு, பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

 பின்னர், அவருடைய உடலை தயாராக வைத்திருந்த இடுகாட்டிற்குக் கொண்டு சென்று கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்யப்பட்டது.  21 குண்டுகள் முழங்க, பழனிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உட்பட பலரும், தங்களுடைய மரியாதையை செய்தனர். பின்னர் பழனி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பழனியின் மனைவியிடம்,  தமிழக முதல்வர் அறிவித்த 20 லட்ச ரூபாய் உதவித் தொகையானது, கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது.  அத்துடன் முதல்வர் அறிவித்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பை சுட்டிக்காட்டி,   பழனியின் மனைவி, தான் ஆசிரியர் பயிற்சி முடித்தவர் எனவும், தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக,  தனக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும்,   கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, இன்று அவருக்கு ஆசிரியைப் பணிக்கான நியமன உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.